ஆண்டவன்கட்டளையும்… அடிமைப்பெண்ணும்…கே.சங்கர்

தமிழ்த்திரையுலகின் வரலாற்றின் தொடக்கத்தில் இயக்குநர்கள்தான் முடிசூடா மன்னர்களைப்போல திரைப்பட உலகில் ஆளுமை செலுத்தி வந்தார்கள். ராஜா சாண்டோ, சுந்தர்ராவ் நட்கர்ணி, தாதா மிராசி, எஸ்.எஸ்.வாசன் இவர்கள் காலத்தை அடுத்து வந்த ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், தற்போதுள்ள சங்கர் எனவும் இவர்களைத் தொடர்ந்து இளையதலைமுறையைச் சார்ந்த வினோத், லோகேஷ் கனகராஜ், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ் போன்றவருடைய தனித்தன்மைகளையும் சொல்லிக்கொண்டே செல்லலாம்.

இத்தகைய இயக்குநர்கள் வரிசையில் தமிழகத்தின் இருபெரும் ஆளுமைகளாகத் திகழ்ந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், என நான்கு தலைமுறை நடிகர்களையும் என்.டி.ராமாராவ், எம்.ஜி.ஆர், செல்வி.ஜெயலலிதா என மூன்று முதல்வர்களையும் இயக்கிய பெருமைக்குரியவர் ஒருவர் உண்டென்றால் அவர்தான் டைரக்டர் கே.சங்கர்.

இவர் பிறந்தது கேரளநாட்டில் மலபார் என்ற பகுதியாக இருந்தாலும் தமிழ்த் திரையுலகம்தான் இவருக்குப் பெரும் புகழைக் கொடுத்தது. தமிழ்த்திரையுலகில் எடிட்டராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 80 படங்களுக்கு மேல் இயக்கிய பெருமை இவரையே சாரும்.

அதிலும் அந்தக்காலத்தில் கைராசி, ஆடிப்பெருக்கு, பாதகாணிக்கை போன்ற படங்கள் தனிமுத்திரை பதித்தவை. ஒரேசமயத்தில் எம்.ஜி.ஆர் அவர்களையும், சிவாஜி அவர்களையும் இயக்கிய பெருமை இவருக்கு உண்டு.

ஒருமுறை ‘பணத்தோட்டம்’ என்கின்ற எம்.ஜி.ஆர். படத்தை இவர் இயக்கிக் கொண்டிருந்தபோது ஒரு அதிசயமான நிகழ்வைச் சொல்வார்கள். எம்.ஜி.ஆர்.தான் அந்தப் படத்தில் கதாநாயகன். அதில் எம்.ஜி.ஆர்.நடித்த ஒரு காட்சியை இவர் மீண்டும் மீண்டும் சரியாக வரவில்லை… சரியாக வரவில்லை… என்று எடுத்துக்கொண்டு இருந்தாராம். இதைப் பார்த்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். நடிப்பதை நிறுத்திவிட்டு, இயக்குநர் கே.சங்கரை ஒரு தனிஅறைக்குள் அழைத்துச் சென்று, ‘காலையில் தம்பி சிவாஜி கணேசன் நடித்த படத்தை இயக்குனீர்களா?’ என்று கேட்டாராம். சங்கரும், ‘ஆமாம்’ என்று சொல்ல, ‘சரி, அதை மறந்துவிடுங்கள். அவருடைய நடிப்பின் பாணி என்பது வேறு, என்னுடைய நடிப்பின் பாணி என்பது வேறு’ என்று விளக்கிச் சொல்லி, மீண்டும் படப்பிடிப்பைத் தொடர்ந்தாராம்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் குடியிருந்த கோயில்’ வெற்றிப்படத்தை இயக்கியவர் இவர்தான். அதனால்தான் எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னுடைய எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பான அடிமைப்பெண்’ படத்தை இவரையே இயக்கச் செய்து, அதில் இரட்டை வேடங்களிலும் நடித்திருந்தார் எம்.ஜி.ஆர்.

பிற்காலத்தில் இவருடைய கவனம் முழுவதும் பக்திப் படங்களை இயக்குவதிலேயே சென்றது. தாய் மூகாம்பிகை, வருவான் வடிவேலன் உள்ளிட்ட பக்தித் திரைப்படங்களை இயக்கினார் கே.சங்கர்.

தமிழ்த்திரையுலகில் வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர்களின் பட்டியலில் திரு.கே.சங்கர் அவர்களின் பெயர் எப்போதும் இருக்கும். இயக்குநர் சங்கர் அவர்கள் குறித்த மேலும் சில செய்திகளைக் காண்போம்…

கே.சங்கர், திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். இவர் கேரளாவில் உள்ள மலபாரில் 1926ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் தேதி பிறந்தார்.

1950களின் துவக்கத்தில் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ஒரு படத்தொகுப்பாளராகத் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனாலும் அவரின் லட்சியம், படங்களை இயக்கவேண்டும் என்பதிலேயே இருந்தது.

பின்னர் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் டாக்டர்’ என்னும் சிங்கள மொழித் திரைப்படமாகும். தம்முடைய கடும் உழைப்பால் உயர்ந்தவர் பின்னர் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களை இயக்கினார்.

கே. சங்கர் அவர்கள் எம்.ஜி.ஆர் நடித்த பணத்தோட்டம், கலங்கரை விளக்கம், குடியிருந்த கோயில், அடிமைப்பெண், சிவாஜி கணேசன் நடித்த ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, அன்புக்கரங்கள், என்.டி.ராமாராவ் நடித்த பூகைலாஷ், ஜெயலலிதா நடித்த கௌரி கல்யாணம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பெருமைக்குரியவர்.

இவர் அன்றைய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிடம் தமிழ்நாடு அரசின் ராஜா சாண்டோ விருதினைப் பெற்றுள்ளார்.

கைராசி இயக்குநரான இவரால்தான் சிவாஜியை வைத்து ஆண்டவன் கட்டளையும் எடுக்க முடியும், எம்.ஜி.ஆரை வைத்து அடிமைப்பெண்ணையும் இயக்க முடியும். எல்லாம் தாய் மூகாம்பிகையின் அருள்…!

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.