அழ(கு)வள்ளியப்பா

வட்டமான தட்டு
தட்டு நிறைய லட்டு
லட்டு மொத்தம் எட்டு…
இப்படிப்பட்ட பாட்டுக்கள்தான் குழந்தைகளின் உள்ளங்களில் எளிதில் பதியும். பொருளும் புரியும். குழந்தைகளுக்கான இலக்கியம் என்பது தமிழில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை எனத் தொடங்குகிறது.
உலகம் முழுவதும் குழந்தைகளுக்கான இலக்கியங்களைப் படைப்பவர்கள் குழந்தைகள் மனதில் மட்டுமல்லாது உலகோர் மனதிலும் நிற்கிறார்கள். இவ்வகையில் தமிழகத்தின் குழந்தை இலக்கியக் கவிஞர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் அழ.வள்ளியப்பா அவர்கள்.
இவரது பாடல்களான….
மியாவ் மியாவ் பூனையார், மீசையுள்ள பூனையார்…
காட்டை விட்டு குள்ளநரியும் வெளியில் வந்ததாம்
கடலைப் பார்க்க வேண்டுமென்று ஆசைக்கொண்டதாம்…
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்…
ஆடும் மயிலிது நன்றாய் ஆடும் மயிலிது
நட்டுவனார் இல்லாமலே ஆடும் மயிலிது…
எங்கள் பள்ளிக்கூடமே எளிமைமிக்க நிலையமே
அங்கே சென்று கற்பதால் அறிவு மேலும் வளருமே…
கடகடகட கடகடா கடகடகட கடகடா வண்டி வருகுது
காளைமாடு இரண்டு பூட்டி வண்டி வருகுது…
போன்றவை நாம் நம் குழந்தைப் பருவத்தை நமக்கு நினைவூட்டும்.
குழந்தை இலக்கியங்களை நாம் படிக்கும்போது அதில் ஒரு ஆச்சரியத்தைப் பார்க்கலாம். அது ஒரு மாயக்கண்ணாடி. குழந்தைகளைப் பெரியவர்களாகவும், பெரியவர்களைக் குழந்தைகளாகவும் காட்டும் ஆற்றலுடையது.
குழந்தை இலக்கியங்களில்தான் மான் பேசும், மயில் பேசும், கிளி பேசும், குயில் பாடும் எனும் அற்புதத்தைக் காணலாம். இத்தகைய குழந்தைப் பாடல்களின், இலக்கியங்களின் வளர்ச்சியே இன்றைய கார்ட்டூன் உலகம். இந்தக் குழந்தைகள் உலகத்தின் பிதாமகர்களில் ஒருவரான இராயவரம் அழ.வள்ளியப்பா அவர்கள் குறித்து மேலும் சில செய்திகளைக் காண்போம்….
தமிழ் இலக்கிய உலகின் பிதாமகர், குழந்தைக் கவிஞர் என்றும் போற்றப்படுபவர் அழ.வள்ளிப்பா. இவர் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரம் என்னும் சிற்றூரில் 1922ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி பிறந்தார். பள்ளிப்படிப்பைத் தம் சொந்தஊரிலுள்ள இராமச்சந்திரபுரம் ஸ்ரீ பூமீஸ்வரஸ்வாமி உயர்நிலைப்பள்ளியில் படித்தார்.
பின்னர் பேராசிரியர்கள் கு.மதுரை முதலியார், இளவழகனார்,டாக்டர் இராசமாணிக்கனார் ஆகியோரிடம் சிலகாலம் தமிழ் பயின்றார் வள்ளியப்பா. தம் பதிமூன்றாம் வயதில் கவிதை எழுதத் தொடங்கினார் அழ. வள்ளியப்பா.
‘சக்தி’ என்னும் பத்திரிக்கை இதழில் தி.தி.ஜ.ரங்கநாதனின் ஊக்குவிப்பால் ‘ஆளுக்குப் பாதி’ என்னும் தம் முதல் கதையை எழுதினார். பின்னர் சக்தியிலிருந்து விலகி வங்கிப் பணியல் சேர்ந்தார். வங்கிப் பணியில் இருக்கும்போதே பாலர் மலர், டமாரம், சங்கு ஆகிய செய்தித்தாள்களுக்கு கௌரவ ஆசிரியராகப் பணியாற்றினார் அழ. வள்ளியப்பா. பின்னர் 1951முதல் 1954 வரை பூஞ்சோலை என்ற இதழுக்கும், ஓய்வு பெற்ற பின் 1983முதல் 1987 வரை கல்கி வெளியீடான கோகுலம் என்ற இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களையும் 55க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். தம்முடைய எழுத்துத் திறமை அனைத்தையும் குழந்தை இலக்கியம் படைப்பதிலேயே செலவிட்டார்.
குழந்தைகளுக்கு எழுதுபவர்களை ஒன்று சேர்த்து 1950ஆம் ஆண்டு குழந்தை எழுத்தாளர் சங்கத்தை நிறுவினார். 16ஆண்டுகளுக்கும் மேலாக 5 சிறுவர் பத்திரிக்கைகளின் பொறுப்பாசியராக இருந்தார் அழ.வள்ளியப்பா.
அழ.வள்ளியப்பா இலக்கியம், நூல் கலை தொடர்பான தமிழ்நாட்டு அரசினரின் குழந்தை இலக்கிய வளர்ச்சி – ஆராய்ச்சி, திரைப்படப் பரிசுத்தேர்வுக் குழு, பாரதீய வித்யா பவன் ஆட்சிக்குழு மற்றும் தேசிய புத்தக டிரஸ்ட் ஆலோசனைக்குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்.
1979இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கல்கி அறக்கட்டளை நிகழ்வில் ‘வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்’ என்ற தலைப்பிலும், 1981இல் 5ஆவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டிலும் சொற்பொழிவாற்றியுள்ளார்.
குழந்தைகள் இலக்கிய முன்னோடி, பிள்ளைக் கவியரசு, மழலைக் கவிச் செம்மல் என்று சில அமைப்புகள் இவரைப் பாராட்டிப் போற்றியுள்ளனர்.
1982இல் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தினால் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்று விருது அளிக்கப்பட்டுப் பாராட்டப்பட்டார்.
பிஞ்சுக் குழந்தைகளின் நெஞ்சைத் தொடும் இலக்கியங்கள் என்றைக்கும் உலகத்தில் மகிழ்ச்சியை விஞ்ச வைக்கும். இது உண்மை.