அறிவே ஆயுதம்…

எடுத்த காரியம் யாவினும் வெற்றி’ – நம்முடைய மகாகவி பாரதியின் உற்சாகமான பாடல் வரி. படிக்கும்போதே நமக்கு உற்சாகத்தையும், மன எழுச்சியையும் உண்டாக்குகிறது.

            எல்லாக் காரியங்களிலும் எல்லோராலும் வெற்றிபெற முடியுமா?  அப்படியானால் ஓட்டப்பந்தயங்களில் சிலர் மட்டுமே வெற்றிக்கோப்பையைப் பெறுகிறார்களே! மற்றவர்கள் தோல்வியடைகிறார்களே இதற்குக் காரணம் என்ன?

               முல்லா நஸ்ருதீன் ஒருமுறை தன் வீரப்பிரதாபங்களை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தார்.

               ‘ஒருதடவை நான் என் எதிரிகளை ஓட வைத்தேன் தெரியுமா?’

               ‘அப்படியா, எப்படி முல்லா இதைச் செய்தீர்கள்?’ – ஒருவன் ஆர்வத்தோடு கேட்டான்.

‘அவர்களைப் பார்த்தவுடன் நான் ஓட ஆரம்பித்தேன். அவர்களும் என்னை விரட்டிக்கொண்டு ஓடி வந்தார்கள். அவர்களை ஓட வைத்தவன் நான்தானே!’ என்றார் பெருமையாக.

               ‘பயிற்சி + முயற்சி + இலக்கு  = வெற்றி’ – இவைதான் வெற்றிக்கோப்பையை அடைவதற்கான வழி.

               மற்றவர்களிடத்திலிருந்து நாம் தனித்து நிற்பது எப்படி?

               ஒரு வேலைக்கான எழுத்துத்தேர்வு, பலரும் கலந்து கொண்டார்கள். ஒரு கேள்வித்தாள் கொடுக்கப்பட்டது. 15கேள்விகளுக்கு ஒரு வரிக்குள் விடையளிக்க வேண்டும். மூன்று நிமிடத்துக்குள்.

        கேள்வித்தாளை வாங்கிய பலரும் வேகவேகமாக விடை எழுதத் தொடங்கினார்கள்.

               கலந்துகொண்ட 50பேரில் 2பேர் மட்டுமே வெற்றி பெற்றார்கள். எப்படி அவர்கள் இருவரால் மட்டும் விடையளிக்க முடிந்தது.

               அந்தக் கேள்வித்தாளில் 15ஆவது கேள்வி – மேலே கண்ட 14 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டாம்’ என்றிருந்தது.

               இதை 48 பேரும் படித்துப் பார்க்கவில்லை. வெற்றி பெற்ற இரண்டுபேர் மட்டுமே முழுவதையும் வாசித்துப் பார்த்து கொடுக்கப்பட்ட 3நிமிடத்தில் கேள்விகளுக்கு விடை எழுதி வெற்றி பெற்றனர்.

               புத்திக்கூர்மை உடையவர்களை அந்தக்காலத்தில் நீதிபதிகளாக நியமிப்பார்கள்.

               மரியாதைராமன் கதைகள், பீர்பால் கதைகள் போன்ற கதைகளை நாம் படித்திருக்கிறோம்.

               மைசூரில் அப்பாஜி என்ற வயது முதிர்ந்தவர் வாழ்ந்து வந்தார். எல்லோராலும் பாராட்டப் பெற்ற அறிவாளியும்கூட. எந்த சிக்கலான வழக்குக்கும் ஆராய்ந்து தீர்ப்புச் சொல்ல வல்லவர்.

               திப்புசுல்தான் மைசூரை ஆண்டுவந்தபோது ஒரு வழக்கு வந்தது.

               மைசூருக்கு அருகில் ஒரு கிராமத்தில் திருவிழா நடைபெற்ற நேரம். அந்தத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சி தேரோட்டம். தேரில் தங்கள் சுவாமியை அலங்கரித்து வடம்பிடித்து இழுத்து வருகிறார்கள்.

               ஊர் எல்லையைச் சுற்றிவரும் வழியில் ஒரு ஆலயத்தில் மரக்கிளை தாழ்ந்து பாதையை மறைத்துக்கொண்டு நிற்பதுபோல் இருந்தது.

               சாதாரணமாக நடந்து செல்வோருக்கு அதனால் தடை இல்லை. இப்போதோ அந்த வழியில் சுவாமியின் தேர் வருகிறது.

               தேர் இழுத்து வந்தவர்கள் அந்தக் கிளையை வெட்டிவிடலாம் என்றார்கள். ஆனால், அந்தப் பகுதியைச் சார்ந்த மக்களோ இம்மரம் தங்கள் குலதெய்வம் குடிகொண்டிருக்கும் மரம் என்றும், கிளையை வெட்டுவது தெய்வகுற்றம் என்றும் தடுத்தார்கள்.

               தேரைத் திருப்பவும் முடியாது. கிளையை வெட்டவும் கூடாது. இரண்டு ஊர் மக்களிடையேயும் கலவரம் வருவதற்கான சூழ்நிலை உருவானது.

               ஊர்ப்பெரியவர்கள் ஒன்றுகூடிக் கலவரத்தைக் கட்டுப்படுத்தி, அரசரான திப்புசுல்தானிடம் வழக்கைக் கொண்டு சென்றனர்.

               திப்புசுல்தான் இந்த வழக்குக்கு தீர்ப்பு சொல்லத் தயங்கினார். ஏனென்றால் அவரோ இஸ்லாம் மார்க்கத்தைச் சார்ந்தவர். இரண்டு தெய்வங்களுள் ஏதாவது ஒன்றுக்குத் துணைநின்றோம் என்ற பெயர் வரலாகாது என யோசித்தார். அப்போது அவரது அமைச்சரும் அப்பாஜியின் பெருமையை எடுத்துச்சொல்லி அவரை வரவழைப்போம் என்றார்.

               அதன்படி அப்பாஜி அவ்வூருக்கு அழைத்து வரப்பட்டார். அனைவரும் அவரின் தீர்ப்பை எதிர்பார்த்து நின்றனர். திப்புசுல்தானும் மாறுவேடத்தில் அங்கு சென்றார்.

               அப்பாஜி அந்த இடத்தை நன்கு சுற்றிப்பார்த்தார். பிறகு இரண்டு ஊர்க்காரர்களையும் அழைத்தார்.

               ‘தேர் இதே பாதையில்தான் வரவேண்டுமா?’ என்று கேட்டார்.

               ‘ஆமாம் ஐயா, அதுதான் காலகாலமான பழக்கம்’.

               ‘சரி, திரும்பியும் போகமுடியாது… இந்தக் கிளையை ஒதுக்கவும் முடியாது இல்லையா?’

               ‘ஆமாம் ஐயா… தெய்வம் குடிகொண்ட மரம் எங்கள் மரம்’ – அந்த ஊர்க்காரர்கள் சொன்னார்கள்.

               சற்று யோசித்த அப்பாஜி சொன்னார்.

               ‘இந்தக் கிளையைக் காட்டிலும் தேரின் உயரம் எவ்வளவு இருக்கும்?’

               ‘சுமார் 5அடி இருக்கும் ஐயா….’

               ‘அப்படியானால் சரி! இந்தப் பாதையைச் சரிவாக ஐந்து அடிக்குப் பள்ளமாகத் தோண்டுங்கள். தேர் பள்ளத்தின் வழியே செல்லட்டும்’.

               ஊர் நாட்டாண்மைக்காரர்கள் ஆணையிட இளைஞர்கள் வேலையில் இறங்க, இரண்டு ஊர்க்காரர்களும் போட்டி போட்டுப் பாதையைச் சரிவாக அமைத்தனர்.

               இப்போது தேர் கிளையைத் தட்டாது உருண்டு சென்று மேலே ஏறியது.

               அனைவரும் மகிழ்ந்தனர். திப்புசுல்தான் மகிழ்ந்து பெரியவரின் தீர்ப்புக்குப் பரிசு வழங்கினார். அறிவாளிகளால் உலகம் காக்கப்படுகிறது என்பதே உண்மை.

               அறிவு அச்சம் காக்கும் கருவி என்று திருவள்ளுவர் கூறுகிறார். நமக்கு துன்பம் வரும் நேரத்தில் நம்மைக் காத்து நிற்கக்கூடிய ஒரே ஆயுதம் கத்தி, ஈட்டி, கோடாரி, துப்பாக்கி, பீரங்கி போன்றவை இல்லை. அறிவுதான் என்பது திருவள்ளுவரின் ஆணித்தரமான கருத்து. எனவே அறிவையே ஆயுதமாகக் கொள்வோம். அறிவாயுதமே உலகைக் காக்கும்.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.