அறியப்படாத போராளி…

வீரபாண்டிய கட்டபொம்மனோடு உடன்பிறந்தவர்கள் இருவர். ஒருவர்
குமாரசாமி என்கின்ற ஊமைத்துரை, மற்றவர் செவத்தையா. ஊமைத்துரை
சிறுவயதிலிருந்தே பேசும்போது பேச்சு திக்கித்திக்கி (Stammering) வந்ததால்
இவரை ஊமைத்துரை என்று மக்கள் அன்போடு அழைத்தனர்.
விடுதலைக்காகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மாவீரன் ஊமைத்துரை.
வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் வீரபாண்டிய கட்டபொம்மனின்
சாதனைக்குப் பின்னால் ஒரு மாபெரும் வீரராகத் திகழ்ந்தவர் ஊமைத்துரை
என்பது புலப்படும். இவர் நட்புணர்வும் மனிதாபிமானமும் கொண்டவர் என்று
இவரது வரலாற்றின் மூலம் அறிகிறோம்.
ஆங்கிலேயருக்கும், தன் அண்ணனாகிய வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும்
போர் ஏற்பட்டது. போரில் இருவரும் தப்பியோடினர். பின்னர் கட்டபொம்மனின்
மறைவுக்குப் பிறகு பாளையங்கோட்டைச் சிறையில் ஊமைத்துரை
அடைக்கப்பட்டார். ஆனால் இவர் தன் வீரத்தாலும், விவேகத்தாலும்
அச்சிறைச்சாலையிலிருந்து தப்பிவந்து வெள்ளையர்களால் பிடிக்கப்பட்ட
தங்களது பாஞ்சாலக்குறிச்சிக் கோட்டையை ஆறே நாட்களில் ஆங்கிலேயரே
வியக்கும் வண்ணம் கட்டிமுடித்தார்.
இவர் கட்டிய கமுதிக்கோட்டை இன்றைக்கும் வலுவோடு காணப்படுகிறது.
இவர் இரவுநேரங்களில் தீப்பந்த வெளிச்சத்தில் மக்களைச் சந்திக்கும்போது
எந்தவொரு வார்த்தையும் பேசாமல் தம் உள்ளங்கைகளில் வைக்கோலைத்
தூளாகும்படி கசக்கிப் ‘ப்பூ…’ என்று ஊதுவாராம். வெள்ளைக்காரர்களை
இப்படித்தான் முறியடிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்ட மக்கள்
வீரத்தோடு ஆரவாரம் செய்வார்களாம்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பியான இவர், பாளையக்காரர்
போர்களில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார். மேலும் வெள்ளையர்களை
எதிர்த்து உருவான, தீரன் சின்னமலை, கேரள வர்மா ஆகியோரைக் கொண்ட ஒரு
பெரும் அணியிலும் இடம்பெற்றிருந்தார்.
ஊமைத்துரை தனது இறுதிக்காலத்தில் சிவகங்கைச் சீமையை ஆண்ட
சின்னமருது பெரியமருது சகோதரர்களிடம் படை உதவி கேட்டுத்
தஞ்சமடைந்தார். இதைக் காரணம் காட்டியே ஆங்கிலேயர்கள் மருது
சகோதரர்களைத் தூக்கிலிட்டனர்.
1801ஆம் ஆண்டு நவம்பார் மாதம் 16ஆம் நாள்
ஊமைத்துரையும் கைது செய்யப்பட்டார். பின்னர் தூக்கிலிடப்பட்டார்.
அண்ணனிடத்தில் பாசமிகுந்த தம்பியாகவும், நாட்டு மக்கள் போற்றிய
வீரத்தலைவராகவும், வெள்ளையர்களே வியக்கும் அளவிற்குக்
களப்போராளியாகவும் விளங்கிய ஊமைத்துரையின் கதை இன்றும் நாட்டுப்புறக்
கதைகளில் கதைப்பாடல்களாகப் பாடப்பெற்று வருகிறது.
கவியரசு கண்ணதாசன் அவர்கள் ‘சிவகங்கைச் சீமை’ என்னும் வரலாற்றுப்
படத்தை எடுத்ததைப் போல “ஊமையன் கோட்டை” என்ற பெயரில்
ஊமைத்துரையின் வாழ்க்கையைப் படமாக்க முயன்றார். ஆனால்; அப்படம்
பாதியிலேயே நின்றுபோனது ஒரு சோகக்கதை.
பிற்காலத்தில் பாளையங்கோட்டைப் பேராசிரியர் டாக்டர். மாணிக்கம்
அவர்கள் ஊமைத்துரை குறித்துக் களஆய்வு செய்து அதனை நூலாகவும்
வெளியிட்டுள்ளார். ஊமைத்துரை குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய அரிய
செய்திகள் பல இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஊமைத்துரை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு
வரலாற்று நாயகர்.