அரசியல் அங்கத அரசு… சோ…

தமிழ்த் திரையுலகில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்குப் பிறகு நடிப்பு உட்படப் பலதுறைகளிலும் ஜெயித்துக்காட்டியவர் ஒருவர் உண்டு என்றால், அவர்தான் ராமிசாமி என்ற இயற்பெயர் கொண்ட சோ’ அவர்கள். இவர் நல்லகல்வியாளர், நாடக நடிகர், கதை வசனகர்த்தா, பத்திரிக்கை ஆசிரியர், பல நிறுவனங்களுக்கு ஆலோசகர், அரசியல் சிந்னையாளர், பாராளுமன்ற உறுப்பினர் என எல்லாத்துறைகளிலும் மிளிர்ந்தவர்.

இவரை நான் திரைப்படங்களிலும் நாடகங்களிலும் பார்த்திருந்தாலும் ஒருமுறை நேரில் சந்திக்கிற வாய்ப்பினையும் பெற்றேன். சென்னையில் இயக்குநர் நடிகர் மௌலி அவர்களுடைய மகன் திருமணத்திற்குப் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்கள் திரு.சோ அவர்கள் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் என மிகப் பெரிய ஆளுமைகளோடு நானும் மணமக்களை வாழ்த்துவதற்காகச் சென்னைக்குச் சென்றிருந்தேன்.

மணவிழாமேடையில் அன்றைக்கு நானும், தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களும் மணமக்களை வாழ்த்திப்பேசினோம். நான் பேசுகிறபோது, கூட்டம் அதிகம் நிறைந்த திருமணவீடுகளில், சாப்பாட்டுப் பந்தியில் நான் பட்டபாட்டை எடுத்துச்சொன்னபோது, அதிகமாக ரசித்துச் சிரித்துக் கைதட்டியவர் திரு. சோ அவர்கள்தான். நான் பேசிமுடித்துவிட்டு இறங்கிவந்து, திரு.கமல் அவர்களிடத்திலே கேட்டேன். உலகையே சிரிக்கவைக்கக்கூடிய சோ அவர்கள் இப்படி வாய்விட்டுச் சிரிப்பதை இப்போதுதான் நான் பார்க்கிறேன்’ என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சோ அவர்கள் என்னிடத்தில் வந்து அற்புதமாப் பேசினீங்க’ என்று கைகொடுத்தார். கமல் அவர்களும் அதை ஆமோதித்தார். உண்மையில் நான் மகிழ்ந்து போனேன்.

ஏனென்றால் சோ அவர்கள் திரையில் தோன்றுகிறபோதெல்லாம் சிந்தனைமிக்க அவரது நகைச்சுவைகளைக் கேட்டு மகிழ்ந்தவன் நான். அதனால்தான் எனக்கு அந்த மகிழ்ச்சி. அவருடைய எழுத்தும் படிப்பவரை வியப்பில் ஆழ்த்தும். அரசியல் நையாண்டி அவருக்குக் கைவந்த கலை. என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்’ என்ற நாடகத்தில் ஒரு அரசியல்வாதி இறந்தபிறகு தேவலோகம் சென்று, அங்கேயும் கலவரத்தை உண்டாக்கித், தேர்தல் வருமாறு செய்துவிடுவான். அப்போது தேவர்களெல்லாம் இரண்டு கட்சியாகப் பிரிந்து சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள். அந்தச் சண்டைக்கு நடுவே அந்த அரசியல்வாதி பேசுவார். இந்த நாடும் தேவலோகமும் கெட்டுப்போக யார் காரணம்? ஊர் உருப்படாமப் போக யார் காரணம்? எல்லாத் தீமைகளுக்கும் யார் காரணம்?’ என்று கேட்டுக்கொண்டு வரும்போது, தேவலோகத்திலிருந்த நாரதர் (சோ தான் நாரதர்) ‘இந்திரா!’ (அப்போது இந்திராகாந்தி எமர்ஜென்சி கொண்டுவந்த நேரம்) என்று நாரதர் சொன்னவுடன், எல்லோரும் திடுக்கிட, நாரதர் சமாளித்துக்கொண்டு, ‘நான் தேவலோகத்து இந்திரனைக் கூப்பிட்டேன்’ என்று சமாளிப்பார். இந்த நாடகம் போடப்படும்போதெல்லாம் இந்தக் காட்சி வரும்போது அரங்கமே கைதட்டலால் அதிரும். இதேபோல இவருடைய பத்திரிக்கையான துக்ளக்கில் இவரது கேள்வி – பதில் நிகழ்ச்சியும் மிகுந்த நகைச்சுவையாய் இருக்கும்.

‘துக்ளக்’ பத்திரிக்கையை இவர் தொடங்கியபோது, முதல் இதழில் அட்டைப்படத்தில் இரண்டு கழுதைகள் படம் போடப்பட்டிருக்கும். அதில் ஒரு கழுதை, ‘சோ பத்திரிக்கைத் தொடங்கிட்டாராம், இனிமே நமக்குச் சாப்பாட்டுக்குப் பஞ்சமில்லை’ என்று சொல்வதாகத் தன்னைத்தானே கேலிசெய்து கொண்டு நம்மையும் மகிழவைப்பார் சோ. அவரைப் பற்றி மேலும் சில குறிப்புகள்….

பகீரதன் எழுதிய ‘தேன்மொழியாள்’ என்ற மேடை நாடகத்தில் சோ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். அந்த பெயரினையே தனது அடைமொழிப் பெயராக மாற்றிக்கொண்டார். பின்னாளில் இவரது உண்மையான பெயரைவிட சோ என்ற பெயரே பிரபலமானது.

1957ஆம் ஆண்டு நாடகங்களை எழுதத் தொடங்கினார் சோ. 1970ஆம் ஆண்டு ‘துக்ளக்’ என்னும் வார இதழைத் தொடங்கினார். பின்னர் 1976ஆம் ஆண்டில் Pick Wick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார் சோ அவர்கள்.

1963ஆம் ஆண்டு சோ அவர்கள் பார் மக்களே பார்’ என்ற படத்தில் நகைச்சுவை கதாப்பாத்திரமாகத் தமிழ்த் திரைத்துறைக்கு அறிமுகமானார். இவர் நடித்த பல திரைப்படங்கள் இவரது நடிப்பால் பெரிதும் பேசப்பட்டன. அவற்றில் முகமது பின் துக்ளக்’ எனும் படம் எக்காலத்திலும் உணர்த்தும் அரசியல் கதையாக அமைந்தது.

சோ அவர்களும் முன்னாள் தமிழக முதல்வருமான செல்வி.ஜெயலலிதா அவர்களும் நெருங்கிய நண்பர்களாவர். இவ்விருவரும் சேர்ந்து 19திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் கே.ஆர் நாராயணன் அவர்களால், ராஜ்ய சபா உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டவர். குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படும் 12எம்பிக்களில் இவரும் ஒருவர். காரணம், இவரது அறிவுத்திறன், இலக்கியங்கள், அறிவியல், சமூகம் மற்றும் கலை ஆகியவற்றில் உள்ள அனுபவமும் திறமையும்தான் சோ அவர்களை மாநிலங்களவை உறுப்பினராக வாஜ்பாயால் நியமனம் செய்யப்பட்டு 1999முதல் 2005 வரை பணியாற்றினார்.

சோ அவர்கள் தனது பத்திரிக்கைத்துறைப் பணிக்காக 1985இல் ‘மஹாரான மேவார்’ வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986இல் வீரகேசரி விருதும், 1994ஆம் ஆண்டு கொயங்கோ விருதும், 1998இல் நச்சிக்கேதஸ் விருதும் பெற்றார்.

விருதுகளால் சோ அவர்களுக்குப் பெருமை என்பதைக் காட்டிலும், அவ்விருதுகளே ‘சோ’ அவர்களால் பெருமை பெற்றன எனலாம்.

அரசியல் அங்கதத்திற்கு (social satire) இனி யார் இருக்கிறார்கள்? அச்சோ…வை விட்டால்.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.