அனுபவமே நல்ல கல்வி…

நாம் சிறுகுழந்தைகளாக இருக்கும்போது, படம் பார்த்துக் கதை சொல்லுதல் நமக்குப் பிடித்தமான ஒன்று. அதிலும் வண்ணப்படங்களாக இருந்துவிட்டால், குழந்தைகள் முகத்தில் மகிழ்ச்சி பொங்கும். இந்தக்காலக் குழந்தைகள் இத்தகைய படங்களை அனிமேஷன் என்று கார்ட்டூன் மூலமாகக் கண்டு மகிழ்கிறார்கள்.
ஒரு படம் ஆயிரம் செய்திகளை நமக்கு விளக்கும். சமீபத்தில் நான், இலக்கிய விழாவிற்காக ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தேன். ஆயிரம் மரங்களுக்கு நடுவே அந்தப் பள்ளி அழகுற அமைந்திருந்தது. பிற்பகல் நேரத்தில் மரங்களுக்கு நடுவே மாணவ, மாணவிகள் அமர்ந்திருக்க நான் பேசத் தொடங்கினேன். மரங்களின் பசுமை, பறவைகளின் ஓசை, வண்டுகளின் ரீங்காரம் இவற்றுக்கு நடுவே மண்தரையில் சம்மணமிட்டு, மாணவ மாணவிகள் அமர்ந்திருந்தார்கள். என் பேச்சுக்கு இடையில் நான் இவற்றைக் குறிப்பிட்டுக் கொண்டே வந்தேன்.
நாம் அமெரிக்காவில் ஓடுகிற ஆறு பற்றி படிக்கிறோம். ஜப்பானில் இருக்கிற எரிமலை பற்றி மனப்பாடம் செய்கிறோம். இவையெல்லாம் உலக அறிவுக்கு. என்றாலும் இங்கிருக்கிற மரங்களின் பெயர்;கள் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?
நம் ஊர்க்குருவிகள், பறவைகள், சிறிய விலங்குகள் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? என்று கேட்டேன். அவர்களில் சில மாணவ மாணவியர் அதற்கு ஆர்வமாகப் பதில் சொன்னார்கள்.
பிறகு, அங்கிருந்த நூலகத்திற்கும், கணினி அறைக்கும் சென்றோம். கணினி அறையில் புதிய ஆத்திச்சூடி தொடங்கி, பல்வேறு குழந்தைக் கதைகளும் பாடல்களும் படங்களாக, பாடங்களாக ஒளி-ஒலியாகக் காண்போரை வியக்க வைத்தன.
கல்வியைப் புத்தகத்தில் படிப்பது, மனப்பாடம் செய்வது ஒருவகைப் படிப்பென்றால், அதேகல்வியை, கணினியில் வண்ண வடிவமாக, நகரும் படங்களாக, நம்மோடு பேசும் ஓசை வடிவமாகக் கேட்பதும் ஒருவகைக் கல்விதான். இதையும் தாண்டி தோட்டத்தில் விளையாடும் ஒரு குழந்தை, வேப்ப மரத்தைத் தொட்டுப் பார்ப்பதும், அதில் ஏறிக் கூடு கட்டியிருக்கும் பறவையைப் பார்ப்பதும், பிறகு ‘தொப்பென்று’ குதித்து வேப்பம்பூவை நுகர்ந்து பார்ப்பதும் மரம் பற்றி அறியும் கல்விதான்.
இதில், நூலறிவு என்னும் கல்வி, தேர்வுக்குப் பயன்படும். கணினி அறிவு புதிய உலகத்துக்கு இட்டுச் செல்லும். அனுபவக் கல்வி வாழ்;க்கையின் இறுதிநாள் வரை பயன்படும்.
குறிப்பாக, கண்ணில் பார்த்தறிந்து, காதில் கேட்டுணர்ந்து, கையால் தொட்டுணரும் அனுபவம் கொண்ட மனிதனின் கல்வியே நிறைவானதாகக் கருதப்படும்.
தோட்டங்களும் மரங்களும் உள்ள கிராமத்துப் பள்ளிக்கூடத்தின் அழகே தனிதான். ஒரு பள்ளிக்கூடத்தில் நான் பேசுவதற்கு முன்பாக மரம் நடவேண்டும் என்றார்கள். ‘எங்கே நடவேண்டும்?’ என்று கேட்டேன். அதற்கு அங்கிருந்த ஒருவர் ஒரு பள்ளமான இடத்தைக் காட்டி, ‘இது ராசியான இடம், இங்குதான் மந்திரி மரம் நட்டார். கலெக்டர் மரம் நட்டார். நீங்களும் இங்கேயே மரம் நடுங்கள்’ என்றார். எனக்கு சிரிப்புத் தாங்கவில்லை!.
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
கல்வியின் கண்ணும் உள.
என்று நாம் காலத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். சோதனைச் சாலையில் வேதியியல் மாற்றங்களைக் கண்ணுக்கெதிரே பார்க்கும் மாணவ மாணவியர்தான் பிற்காலத்தில் அறிவியலில், ஆராய்ச்சியில் மேம்பட்டு நிற்பர்.
ஆசிரியரின் விருப்பப்படி அவரிடம் சாக்பீஸை வாங்கிக்கொண்டு கரும்பலகையில், தானே கணக்குப்போடும்போது அந்தக் குழந்தைக்கு ஒரு தன்னம்பிக்கையும் பிறக்கிறது. எனவே கற்றறிவும் வேண்டும், பட்டறிவும் வேண்டும்.