அடாது மழை பெய்தாலும்…. விடாது பட்டிமன்றம்…

பட்டிமன்ற நடுவராக நான் பேசத் தொடங்கிய காலங்களில் எனது குழுவினரோடு நான் சென்று, பற்பல அனுபவங்களைப் பயணங்களில், மேடைகளில் மாறுபட்ட சூழ்நிலைகளுக்கேற்ப அனுபவித்ததுண்டு. ஒருமுறை இராமநாதபுரத்தில் ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் சேர்ந்து, தங்கள் சங்கத்தின் சார்பாக ஒரு பட்டிமன்றம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இராமநாதபுரத்தில் அரண்மனைக்கு எதிர்ப்புறத்தில் நான்கு வீதிகள் சந்திக்கிற பொதுஇடத்தில் மேடையமைத்திருந்தார்கள். “சமுதாயநலக் கருத்துக்களைப் பெரிதும் வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமா? கவியரசு கண்ணதாசனா?” என்பது தலைப்பு. இரவு ஒன்பது மணிக்குப் பட்டிமன்றம் தொடங்கியது. லேசான வாடைக்காற்றும், மிதமான மழையும் தொடங்கிற்று. கூடியிருந்த கூட்டம் சற்றும் அயராமல், எங்களுடைய பேச்சுக்கு வரவேற்பையும், ஆர்வத்தையுமும் காட்டி சிரித்து, மகிழ்ந்து கைதட்டியபடி இருந்தனர்.
பட்டிமன்றப் பேச்சாளர்களின் பேச்சு அனல் பறக்கச் சூடுபிடிக்கத் தொடங்கியது. தூறலாகப் பெய்த மழையும், கனமழையாகப் பின்னத் தொடங்கியது. குடை வைத்திருந்தவர்கள் தவிர, மற்றவர்கள் எல்லாம், வீதியோரங்களில் ஒதுங்கி நின்று கொண்டார்கள். யாரும் போவதாகத் தெரியவில்லை. அடுத்தகட்டச் சோதனை மேடையில் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக ஒழுகிக்கொண்டிருந்த மேடை, மழைநீர் சேகரிப்புத் தொட்டிபோல மாறி, எங்களைத் தொப்பலாக நனைத்தது. ஆனாலும், நாங்களும் விடவில்லை. மழையும் விடவில்லை. நம் நாட்டின் வழக்கப்படி, மழை வந்ததும் கரண்ட் ‘கட்’ ஆனது. தண்ணீரில்தான் மின்சாரம் எடுக்கிறார்கள். ஆனாலும் மின்சாரம், மழையில் கரைந்து காணாமல் போய்விடுகிறது. அதற்குள் ஆட்டோக்கார நண்பர்கள், மின்சாரம் போனால் பரவாயில்லை. ஜெனரேட்டருக்குப் பதிலாக பேட்டரி (பேட்டரி லைட் அல்ல) இருக்கிறது என்று சொல்லி, அதில் பேச வைத்தார்கள்.
மேடையின் மேற்குப்பகுதி பந்தல் ‘தொபீரென’ பொத்துக்கொள்ள, நாங்கள் அத்தனைபேரும் மேடையில் நீராடினோம். பட்டிமன்றம் அவ்வளவுதான் என்று நீங்கள் நினைப்பீர்கள். கரண்ட் இல்லை, மேடை இல்லை, முன்புறத்தில் கூட ஆட்கள் இல்லை, ஓரமாக நிற்கிறார்கள். அப்போது, அந்த ஆட்டோ சங்கத்தைச் சார்ந்த நண்பர்கள், மிக அற்புதமான யோசனையைச் செயல்படுத்தினார்கள்.
ஐந்து ஆட்டோக்களை மேடைக்கு முன்பாகக் கொண்டுவந்து மக்களுக்கு முன்பாக நிறுத்தினார்கள். நடு ஆட்டோவில் நடுவர் நான்தான். ஏனைய இரண்டு ஆட்டோக்களில் இரண்டு அணியைச் சேர்ந்தவர்கள் இரண்டு பக்கமும் அமர்ந்திருக்க, அனைவருக்கும் மைக் கொடுக்கப்பட்டது. நான் ஆட்டோ நடுவராக அதிலேயே அமர்ந்து தீர்ப்பு சொல்ல, எல்லா ஏற்பாடுகளும் முடிந்ததும், மழை நின்றது. மக்கள் மகிழ்வோடு வந்து, கைதட்டிப் பாராட்டி மகிழ்ந்தார்கள். நான் பார்த்தவரையில் இப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை மீண்டும் சந்தித்ததில்லை.
மக்களின் ஆதரவிருந்தால், மலையைக் (மழை) கூடப் புரட்டிவிடலாம்.