அகராதியின் தந்தை… வீரமாமுனிவர்…

பழைமையும் பெருமையும் மிக்க இந்தியப் பெருநாட்டின் செல்வவளத்தை, இயற்கை வளத்தைக் கேள்வியுற்ற போர்ச்சுக்கீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், ஆர்மீனியர்கள் போன்றோர் இந்நாட்டுக்கு முதலில் வியாபாரம் செய்யத்தான் வந்தனர்.

வந்த இடத்தில், இந்தியாவின் ஒற்றுமையின்மையைக் கண்டபின்பு, அவர்களெல்லாம் தங்களது துப்பாக்கி, பீரங்கி பலத்தால் இந்தியாவின் பல பகுதிகளை ஆளத் தொடங்கினார்கள். இப்போட்டியில் வென்றவர்கள் ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும்தான். (வந்தவாசி என்ற இடத்தில் நடந்த போர்தான் இந்த அதிகாரப் போட்டியைத் தீர்மானித்தது) பிரெஞ்சுக்காரர்கள் பாண்டிச்சேரி, காரைக்கால், கோவா, ஆகிய பகுதிகளைக் கைப்பற்ற, இந்தியா முழுமையும் ஆங்கிலேயரின் ஆளுகைக்குக் கீழ் வந்தது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆட்சியைப் பிடித்ததோடு இந்தியாவில் தங்கள் மதத்தைப் பரப்புவதற்காகவும் இந்தியமக்களைத் தங்களது கிறித்தவ மதத்திற்கு மதம் மாற்றம் செய்வதற்காகவும் தங்கள் நாட்டுப் பாதிரிமார்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். அப்படி வந்தவர்கள்தான் கால்டுவெல், ஜி.யு.போப், கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற வீரமாமுனிவர் மற்றும் ரேனீஸ் பாதிரியார், போன்றவர்கள்.

இவர்கள் அனைவரும் மதம் பரப்புவதற்காக வந்திருந்தாலும் இவர்களை ஈர்த்து தமிழ் மக்களாக்கிய பெருமை நம் பண்டைய தமிழ்மொழிக்கே உண்டு. இப்பாதிரிமார்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியைத் தமிழகத்திலேயே கழித்தார்கள். அத்தோடு தமிழ்மொழியை நன்கு கற்று தமிழுக்குப் பணிசெய்யவும் தொடங்கினார்கள். தங்கள் உழைப்பால் தமிழன்னைக்கு அணி செய்யவும் தொடங்கினார்கள்.

இவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர். இவர் தமிழுக்குச் செய்த பணிகளைக் கீழ்க்கண்டவாறு பட்டியலிடலாம்.

1.            தமிழ்மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார்.

2.            சதுரகராதி’ என்னும் பேரகராதி ஒன்றை முதன்முதலில் உருவாக்கித் தந்தார்.

3.            தொன்னூல் விளக்கம் என்னும் இலக்கண நூலையும் படைத்தார்.

4.            ‘தேம்பாவணி’ என்னும் காப்பியத்தைத் தமிழுக்குப் படைத்துத் தந்ததோடு பல சிற்றிலக்கியங்களையும் படைத்துத் தந்தார்.

5.            திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களைப் பிறமொழிகளில் மொழி பெயர்த்துள்ளார்.

6.            தமிழில் செய்யுள்கள் மட்டுமே வழங்கிவந்த காலத்தில் உரைநடை என்னும் வடிவத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்து பல நூல்களையும் தமிழில் இயற்றினார் (அவி விவேகி என்னும் பரமார்த்த குரு கதை)

இத்தனை தொண்டுகள் புரிந்த வீரமாமுனிவரைக் குறித்து மேலும் விரிவான செய்திகளைக் காண்போம்….

வீரமாமுனிவர் இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் கி.பி.1710ஆம் ஆண்டு தமிழகத்து வந்தார். வந்த இவர் இங்குள்ள மக்களின் மொழியை கற்கவேண்டும் என கற்க ஆரம்பித்துத் தமிழின் சிறப்பினால் ஈர்க்கப்பட்டுத் தமிழ்த் தொண்டராகவும் தமிழறிஞராகவும் மாறினார்.

தைரியநாதர் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டு பின்னர் அது வடமொழி என்றறிந்து வீரமாமுனிவர் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பெயர் மாற்றம் செய்துகொண்டதோடு இந்நாட்டில் இருந்த சமயத் தொண்டர்களைப் போலவே, தாமும் நெற்றியில் சந்தனம் பூசி, காதில் முத்துக் கடுக்கன் அணிந்து, காவி அங்கி உடுத்திப், புலித்தோல் பதிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொண்டார். இப்படித் தோற்ற மாற்றம் செய்துகொண்டதோடு மட்டுமல்லாமல், காய்கறி உணவை மட்டுமே உண்டு, சைவ உணவினராகவும் மாறினார்.

தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார்.  23 நூல்களைத் தமிழில் இயற்றிய இவர் கிறிஸ்துவின் கதையைத் தேம்பாவணி’ என எழுதினார். அந்நூலில் கதை மாந்தர்களின் பெயர்களைத் தமிழ்படுத்தினார். எடுத்துக்காட்டாக ‘ஜோசப்’ என்பதை ‘வளன்’ என்று மாற்றினர். இதற்கு மூலமொழியின் அர்த்தத்தைப் பயன்படுத்தினார் என்பது அவரின் உழைப்பை விளக்கும்.

மேலும் இவர் திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரியம்மாள் அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களையும், சதுரகராதி எனப்படும் அகராதியையும், தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலையும் எழுதியுள்ளார்.  இவற்றுள் தொன்னூல் விளக்கம் ‘குட்டித் தொல்காப்பியம்’ என அழைக்கப்படும் பெருமையுடையது. வீரமாமுனிவர் அவர்கள் சதுரகராதியை இயற்றியதால் இவரைத் தமிழ் அகராதித் தந்தை’ என்று அழைக்கின்றனர்.

வீரமாமுனிவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கைத் தொடர்பான நிகழ்ச்சிகளையும், இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப ‘தேம்பாவணி’ என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.

திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார்.

தமிழ் இலக்கணத்தை விளக்கும் தொன்னூல் விளக்கத்தையும் எழுதியுள்ளார். அதில் கொடுந்தமிழ் எனப்படும் பகுப்பளித்து பேச்சுத்தமிழை விவரிக்க முதல் முயற்சியை எடுத்தார் வீரமாமுனிவர்.

இவர் எண்ணற்ற தமிழ்ச் சுவடிகளைத் தேடி அலைந்ததால் சுவடி தேடிய சாமியார்’ எனப் பெயர் பெற்றார். தமிழ் கற்க ஏதுவாகத் தமிழ் – இலத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் சுமார் 1000 தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும்.

பின்னர் 4400 சொற்களைக் கொண்ட தமிழ் – போர்ச்சுக்கீசிய அகராதியை உருவாக்கினார். தமிழில் உயிர் எழுத்துக்களின் அருகில் ர சேர்த்தும் (அ:அர, எ:எர) உயிர்மெய் எழுத்துகளின் மேல் குறில் ஓசைக்குப் புள்ளி வைத்துக்கொண்டிருந்தார்கள். அவைகளின் நெடில் ஓசைக்குப் புள்ளி வைக்காமல் விட்டார்கள். தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்தப் பழைய முறையை 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி ‘ஆ ஏ’ எனவும், நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் (கே, பே) வழிக்கத்தையும் உண்டாக்கினார்.

இப்படிப் பல்வேறு வகையான நூல்களைப் படைத்த ஒரு புலவரைக் காண்பது, தமிழில் மட்டுமன்று உலகின் பிற மொழிகளிலும் கூட மிக அரிய ஒன்றாகும். இதற்குக் காரணம் நம் தமிழ்மொழிதான் என்பதும் உண்மையாகும்.

மதம் பரப்ப வந்தவரை மணம் மாற்றியது நம் தமிழ்தான்.

தமிழுக்கு வீரமாமுனிவர் பெருமை சேர்த்தார். தமிழால் அவர் இன்றும் பெருமை பெற்றுக்கொண்டிருக்கிறார். தமிழ் கற்றோரையும் உயர்த்தும், மற்றோரையும் உயர்த்தும். சான்று வீரமாமுனிவர் போன்றவர்கள்.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.