புலவர் பாட்டுக்கு உரைஎழுதிய உழவர்

               தமிழ் இலக்கிய வரலாற்றில் அரிய பணிகள் செய்திருந்தும்கூட, அவர்கள் அறியப்படாத அறிஞர்களாகவே வாழ்ந்து மறைந்திருப்பது வருந்தத்தக்க செய்தியாகும். சோழவந்தானூர் அரசஞ்சண்முகனார் போன்ற அறிஞர்களின் தமிழ்ப்பணியை இந்த உலகம் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகத்தான், என் தந்தையார் புலவர் கு.குருநாதன் அவர்கள் சோழவந்தானூர் அரசஞ்சண்முகனாரின் தமிழ்ப்பணி’ என்ற தலைப்பில் என்னை மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப்பட்ட ஆய்வினை (பி.ஹெச்.டி) மேற்கொள்ளப் பணித்தார். நானும் அவ்வாறே பல்லாண்டுக்காலம் (1983 – 1989, ஆறாண்டுகள்) அவரது மறக்கப்பட்ட நூல்களைத் தேடி ஆய்வுசெய்து முனைவர்ப்பட்டமும் பெற்று தற்போது காவ்யா பதிப்பகத்தில் நூலாகவும் வெளியிட்டுள்ளேன்.

               இதேபோன்று எனது மேற்பார்வையில் முனைவர்ப்பட்ட ஆய்வினை மேற்கொண்ட எனது மாணவ, மாணவியருக்கும் கூடியமட்டும் அரிய செய்திகளை உலகம் அறியச்செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளுமாறு சொல்லுவேன். அவ்வாறு என்னிடத்தில் ஆய்வுப்பட்டம் பெற்ற பதினாறு மாணவ, மாணவியர்களுள் ஒருவராகிய திரு. வே.கார்த்திக் அவர்களை அறியப்படாத தமிழ்அறிஞர்களைப் பற்றி ஆய்வுசெய்யுமாறு கூறினேன். அவரும் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனாரின் உரைத்திறன் குறித்து பல்கலைக்கழக மானியக்குழு நடத்திய தேசிய தகுதித்தேர்வில்; (JRF) தரத்தில் வெற்றிபெற்று அவ்வுதவித் தொகையையும் பெற்று ஐந்தாண்டுக்காலம் கடுமையாக உழைத்து முனைவர்ப்பட்டமும் பெற்றார். தற்போது சென்னையில் அகரமுதலி இயக்ககத்தில்’ (தமிழ் வளர்ச்சித் துறை) தொகுப்பாளராகச் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்.

           அவர் தன் ஆய்வுப்பற்றிக் கூறும்போது தியாகராசர் கல்லூரித் தமிழ்த்துறை ஆய்வுமையத்தில் நான், ‘பெருமழைப்புலர் பொ.வே சோமசுந்தரனாரின் சங்க இலக்கிய உரை நுட்பம்’ எனும் தலைப்பில், ஐயா அவர்களின் (பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்) நெறிகாட்டுதலின்படி முனைவர்ப்பட்ட ஆய்வினை மேற்கொண்டேன். பொ.வே. சோமசுந்தரனாரின் உரைநூல்கள் முழுவதையும் திரட்டி நன்கு ஆய்வு செய்ததுடன் அவரது ஊரான மேலைப் பெருமழைக்கும் சென்று களஆய்வாக சில செய்திகளையும் சேகரித்தேன். புலவர் அவர்கள் வேளாண்மைத் தொழிலைச் செய்துகொண்டே நற்றமிழ் அறிஞர்களிடம் நல்ல தமிழினை ஆர்வத்துடன் கற்றார். அத்தோடு தனக்கு வழிகாட்டிய தமிழ்ப் பேராசிரியப் பெருமக்களின் ஆணையின்படி சங்கஇலக்கிய நூல்களான பத்துப்பாட்டிற்கும், எட்டுத்தொகைக்கும் (பதிற்றுப்பத்து, புறநானூறு தவிர) அனைவரும் புர்pந்துகொள்ளுமாறு எளிய உரையினை அயராமல் உழைத்து எழுதினார். அந்நூல்கள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாக வெளிவந்துள்ளன. அயராத உழைப்பில் உருவான உரைநூல்களுக்காகத் தமிழக அரசு அவரது நூல்களை அரசுடைமையாக்கி அவருக்குப் பெருமை சேர்த்தது என்று நெகிழ்வோடு கூறினார்.

               இத்தகைய, தமிழுலகம் பெரிதும் அறிந்திடாத பெரும்புலவராகிய பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் குறித்து மேலும் சில செய்திகளைக் காண்போம்…

               பெருமழைப் புலவர்’ என அழைக்கப்பட்ட பொ.வே.சோமசுந்தரனார் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியராகப் போற்றப்பட்டவரும், தலைசிறந்த தமிழறிஞரும் ஆவார். கவிஞர், உரையாசிரியர், நாடகாசிரியர் எனப் பன்முக ஆளுமைகொண்ட இவர், தஞ்சாவூர் மாவட்டம் (இன்றைய திருவாரூர் மாவட்டம்) திருத்துறைப்பூண்டியை அடுத்த மேலைப்பெருமழை என்ற ஊரில் 1909ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி பிறந்தார்.

திண்ணைப்பள்ளி ஆசிரியரால் கவரப்பட்ட இவர், மேற்கொண்டு படிக்க வேண்டும் என உறுதிபூண்டார். எனவே காலையில் அப்பாவுடன் விவசாய வேலைகளைச் செய்த இவர், இரவில் தமிழ் நூல்களைப் படித்து வந்தார். இவரால் மேற்கொண்டு படிக்கமுடியாத காரணத்தால், தொடர்ந்து சுயமாகக் கல்வி பயின்று, கவிதைகள் எழுத ஆரம்பித்தார்.

தன்னுடைய கிராமத்துக்கு அருகே உள்ள ஆலங்காடு என்ற ஊரில் வாழ்ந்து வந்த சர்க்கரைப் புலவரைச் சந்தித்துத், தான் எழுதிய கவிதைகளைக் காட்டித் தனது கல்வி கற்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். இவருடைய கவிபுனையும் ஆற்றலையும், கல்வி கற்கும் ஆர்வத்தையும் உணர்ந்த அவர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலுமாறு ஆலோசனை வழங்கினார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றிய பூவராகன்பிள்ளைக்கு அறிமுகக் கடிதம் கொடுத்தார். அங்குக் கிடைத்த கல்வி உதவித்தொகையைப் பெற்று கல்வி பயின்றார். அங்கு விபுலானந்த அடிகள், சோழவந்தான் கந்தசாமியார், பொன்னோதுவார், பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், பூவராகன் பிள்ளை, சோமசுந்தர பாரதியார், மு.அருணாசலம் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.

அங்கு முதல் மாணவராகத் தேர்ச்சிப் பெற்று புலவர் பட்டம் பெற்றார். ஆனால் தமிழ்மொழியை அறியாத ஆங்கிலேய ஆளுநர் எர்ஸ்கின் பிரபு வழங்கிய சான்றிதழை வைத்துக்கொள்ள விரும்பாமல் அதைக் கிழித்து எறிந்துவிட்டு, சொந்தஊர் திரும்பினார் பொ.வே.சோமசுந்தரனார் அவர்கள். இவருடைய ஆசான் பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியாருக்குத் திருவாசகத்துக்கு உரை எழுதும் பணியில் உதவியாக இருந்தார். அப்பயிற்சியே பின்னாளில் இவர் உரை எழுதுவதற்கு அடித்தளமாக அமைந்தது. 

இவ்வாறு, பொ.வே.சோமசுந்தரனாரின்உரைநடை மற்றும் நாடகநூல்கள்;-

பொ.வே.சோமசுந்தரனாரின் பதினெண்கீழ்க்கணக்கு உரைகள்:-

1.           ஐந்திணை ஐம்பது 2. ஐந்திணை எழுபது

பக்தி இலக்கிய உரைகள்:-

1.            திருக்கோவையார் 2. கல்லாடம்

காப்பிய உரைகள்:-

1.            சிலப்பதிகாரம் 2. மணிமேகலை 3. சீவகசிந்தாமணி 4. வளையாபதி 5. உதயணகுமார் காவியம் 6. நீலகேசி 7. சூளாமணி

இலக்கண உரை:-

1.            புறப்பொருள் வெண்பாமாலை

புராண உரை:-

1.            தணிகைப் புராணம் (1071 செய்யுள்கள்)

சித்தர் பாடல்களுக்கான உரை:-

1.            பட்டினத்தார் பாடல்கள் (பிற்பகுதி மட்டும்)

இனி, பொ.வே.சோ. எழுதிய உரைநடை மற்றும் நாடகநூல்கள்,

உரைநடை நூல்கள்:-

1.            பெருங்கதை மகளிர்

2.            பெருங்கதை வசனம்

3.            பண்டிதமணி வரலாறு

நாடகப் படைப்புகள்:-

1.            செங்கோல்

2.            மானனீகை

சங்க இலக்கியங்களுக்கு இவருடைய உரையில் திணைகள், துறைகள் குறித்த விளக்கம், இலக்கணக் குறிப்புகள் அனைத்தும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன.

மேலும் நாடக நூல்களான செங்கோல், மானனீகை மற்றும் பண்டிதமணி வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட உரைநடை நூல்கள் மற்றும் பல நாடகங்களையும் எழுதினார். 20ஆம் நூற்றாண்டு உரையாசிரியர்களுள் குறிப்பிடத்தக்கப் பெருமழைப் புலவர்; தமிழ் உரை மரபுகளை அடியொற்றியும், மாணவர்களுக்குப் புரியும் வகையில் எளிமையாகவும் தமது உரையை அமைத்துத் தமிழ் உலகிற்குப் பங்காற்றினார்.

பெருமழைப் புலவரின் உரைத்திறனுக்கு ஒரு சான்று..

“யாயும் ஞாயும் யாரோ கியரோ” எனத் தொடங்கும் குறுந்தொகையின் 40ஆவது செய்யுளில் வரும் ‘எவ்வழி அறிதும்’ என்ற சொற்றொடருக்கு, “ஒருவரையொருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்?” என உ.வே.சாமிநாதையரும், “எக்குடிவழி என்று அறிதும்” என்று இரா.இராகவையங்காரும் பொருள் கூறியுள்ளனர்.

ஆனால் பெருமழைப்புலவரோ, “உறவென்பது தாய், தந்தை மரபு பற்றி வருவதால், அவ்விரு மரபானும் யாம் தொடர்புடையோம் அல்லம், நட்பாலும் தொடர்புடையோம் அல்லம் என்பதாலும், கண்டறிதல், கேட்டறிதல் எனும் இருவழிகளானும் அறியாததாலும் எவ்வழி அறிதும்” என்று தலைவன் கூறியதாக நுட்பமாக உரைவரைந்துள்ளார்.

சங்க இலக்கியக் கடலில் மூழ்கி, அதற்கான அரிய உரைகளைப் பெருமழையாகத் தமிழ் உலகிற்குத் தந்த பெருமழைப் புலவரைப் போற்றுவோம்! உரைமழையை வாழ்த்துவோம்!

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.